சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் தரிசன நேரம் மாற்றம்!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. சூரியன்,  பூமி,  நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும்.  இந்த நிகழ்வு பௌர்ணமி நாளில் தான் ஏற்படும். …

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சூரியன்,  பூமி,  நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும்.  இந்த நிகழ்வு பௌர்ணமி நாளில் தான் ஏற்படும்.  நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும்,  சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இன்று நள்ளிரவில் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் சந்திரன் நுழைந்தாலும்,  பூமியின் இருண்ட நிழல் சந்திரன் மீது விழுவது  நாளை அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கி 02:24 மணி வரை நிகழவுள்ளது.

ஆசியா,  ரஷியா,  ஆப்பிரிக்கா,  அமெரிக்கா,  ஐரோப்பா,  அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியும்.  இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிரகணம் தெரியும்.  டெல்லியில் இருந்து பார்த்தால் வானத்தின் தென்மேற்கு பகுதியில் கிரகணம் தெரியும்.

இதையும் படியுங்கள்:தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…

சந்திர கிரகணத்தை சிறப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கண்களால் காணலாம்.  எனினும்,  பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும் போது மிக தெளிவாக கிரகணத்தை காணலாம்.  கிரகணம் நன்றாக தெரியவேண்டுமானால்,  பிரகாசமான விளக்கு ஒளி இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருண்ட ஒளி இல்லாத பகுதிகளில் சென்று பார்க்கவேண்டும்.

சந்திர கிரகணத்தையொட்டி இன்று இரவு 7.05 மணி முதல் நாளை அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் இன்று இரவு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும்.  சந்திரகிரகணம் முடிந்ததும் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும்.  நாளை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் துணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது.  நாளை வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை வழக்கம் போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இன்று மாலை சாயரட்சை அர்த்தஜாமம் பூஜை முடிந்து இரவு 7 மணிக்கு பிறகு கோயில் நடை சாத்தப்படுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு ஆகம விதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜைகள் செய்து காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.