பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன், எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர் புகழ்ந்து பேசினார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20ம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவராட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன்.
ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி.
கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கும் ஓடும் என்று கூறினார்.








