நான் சொதப்பிவிடுவேன் என்று பொன்னியின் செல்வனை கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார் என பாரதிராஜா கூறினார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நடைபெறும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் திரைத்துரையினர் பலர் கலந்துக்கொண்டனர். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது விழாவில் பேசிய பாரதிராஜா, 9ம் வகுப்பு படிக்கும்போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் சரித்திர கதையைப் பிசகாமல் எடுக்கவேண்டும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்ஜிஆர் பேசினார். வந்தியத்தேவனாகக் கமலை வைத்து எடுக்க நினைத்தார்.
ஆனால் அதன் பிறகு எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார். நாம் நிறை கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம் நிறையக் கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது.
இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை , குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவைத் தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டு தான் போவேன் என பாரதிராஜா விழாவில் பேசினார்.







