செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறு தானிய உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு தானிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
தமிழக அரசு சிறு தானிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டை
சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகமும் சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் இக் கல்லூரியின் மாணவிகள் கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வரிசையாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு, சாப்பிட்டு பார்த்து மகிழ்ந்தார். பின்னர் சிறந்த சிறு தானிய உணவுகளை உருவாக்கிய மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
ம. ஸ்ரீ மரகதம்







