பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு! – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நீதித்துறை உள்ளிட்ட 32 துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்த நிலையில், 2 நாட்கள் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. முதலில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, சமூக நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகள் சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதனிடையே, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது:

“கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். ஆவின் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு ரூ.60 கோடியும், ஆண்டுக்கு ரூ.720 கோடியும் செலவாகும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.