தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்த பகுதி முழுவதும் சோதனை நடத்தினார். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகச் சோதனை செய்ததில் தவறான தகவல் எனத் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கட்டுப்பாட்டறைக்கு போன் செய்த நபரின் செல்போன் என்னை வைத்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை, செனாய் நகரில் உள்ள ஒரு நபரின் முகவரி கிடைத்துள்ளது. உடனடியாக அங்குச் சென்ற போலீசார் விசாரணை செய்ததில் ஏற்கனவே பலமுறை பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அளித்த புவனேஷ் இந்த அழைப்பைச் செய்ததாகக் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், புவனேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதும், கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் பணியாற்றக்கூடிய அன்பழகன் என்பவரின் செல்போனை அவருக்குத் தெரியாமல் எடுத்து புவனேஸ் காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து புரளியைக் கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு புவனேஷ்-யை எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுமாறு காப்பக ஊழியரிடம் தெரிவித்துவிட்டு போலீசார் சென்றுள்ளனர். மேலும், புவனேஷ் மீது இதேபோல தேனாம்பேட்டை, அபிராமபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 9-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.








