மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் மூலம் பண மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று தற்போது பணிபுரிந்துவருகிறார். இவர் நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரடி ஆய்வுசெய்வதோடு, பணி விவரங்கள் குறித்து அவ்வப்போது மாநகராட்சி மண்டல, இணை மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பி பணம் வேண்டும் எனச் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர். சிலர் நேரடியாக ஆணையாளரைத் தொடர்புகொண்டு பணம் குறித்துக் கேட்டுள்ளனர்.
அப்போது அதிகாரிகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், மோசடி தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், போலியான வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொண்டபோது பெண் ஒருவர் பேசியதும், பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் இது போன்ற மோசடிகள் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








