தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் நியூஸ் 7 தமிழுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பிரத்யேக பேட்டியில், தேசிய அரசியல் என்பது அருணாச்சல பிரதேசத்தில் தேர்தலில் நின்றால்தான் என்பது இல்லை. இந்திய ஒன்றியத்தில் எப்பொழுதுமே திமுக தேசிய அரசியலில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறது.தேவகவுடா பிரதமராவதற்கு திமுகவின் கருத்தும் தேவைப்பட்டது, மத்தியில் பெரும்பான்மை இல்லாத நேரங்களில் கலைஞர் டெல்லிக்கு சென்று தன்னை தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய அரசியலில் திமுகவிற்கு பங்கு இல்லை என்றால் எந்த ஒரு சிறப்பான திட்டங்களையும் மத்தியில் உள்ளவர்கள் செய்திருக்க முடியாது. தேசிய அரசியலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற விஷயத்தை முடிவு செய்கிற அளவிற்கு, கருத்து சொல்கிற அளவிற்கு ஸ்டாலின் உயர்ந்துள்ளார்.திமுக எப்பொழுதும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை நேர்மறையாக செய்திருக்கிறதே தவிர, எதிர்மறையாக செய்யவில்லை.
திரிபுராவில் நின்றார்களா? அருணாச்சல பிரதேசத்தில் நின்றார்களா? என்று பாஜக கேட்பது கொச்சைத்தனம். ஒரு மாநில கட்சி தேசிய அரசியலில் பங்கு வகிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியது சரியானது தான். எல்லோரும் ஈரோட்டில் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம் என கூறுகிறார்கள். பணத்திற்கும் ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு, இல்லை என்று சொல்லவில்லை. பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றால் அம்பானி, அதானிதான் இந்தியாவின் பிரதமராக இருக்க முடியும். தோற்றுப்போனவர்கள் அதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளாமல், தவறுகளை சரி செய்யாமல் வெற்றியை கொச்சைப்படுத்துவது தவறான விஷயம்.
எவ்வளவோ செலவு செய்த வேட்பாளர்களெல்லாம் தோல்வி அடைந்திருக்கிறார்கள். கூட்டணியில் மாற்றம் என்பது அனைத்து தலைவர்களும் இணைந்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். நான் தனிமனிதனாக கருத்துச் சொல்ல முடியாது என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா