பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் பல்லடம் அருகே கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான சபரி, ஷியாம் இருவரும் திருப்பூர் பல்லடம் அருகே தனியார் தோட்டத்தில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு காசீம், நவீன் ஆனந்த், விபின்தாஸ், செல்வகணபதி ஆகியோர் கூலிப்படையாக வேலை பார்க்கின்றனர். இவர்கள் பல்லடம் அருகே அருள்புரம், உப்பிலிபாளையம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் 4 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூலிப்படையினரை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடமிருந்து கத்தி அரிவாள், ஏர் கன் எனப்படும் துப்பாக்கி, இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான குற்றவாளிகள் சபரி, ஷியாம் ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
அனகா காளமேகன்







