டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி இரவில் கப்பலில் இருந்தவர்கள்ஆட்டம் பாட்டம் என பொழுதை இனிமையாக கழித்து விட்டு அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதியது. மூழ்க வாய்ப்பே என கூறப்பட்ட அந்த கப்பல், 3 மணி நேரத்தில் நீரில் மூழ்கியது.
இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்று 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்தது 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால் கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.
அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒனறு நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும்.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், ஓஷன்கேட் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நாா்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேருடன் நீர்மூழ்கி வியாழக்கிழமை புறப்பட்டது.
கடலுக்கு அடியில் சுமார் 4 கி.மீ சென்ற நிலையில் நீர்மூழ்கிக்கும், கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டிருந்த போலார் பிரின்ஸ் என்ற கப்பலுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த நீா்மூழ்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான அந்த நீா்மூழ்கியை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க கடலோர கப்பல் படை, கனடா நாட்டின் விமான படை உதவியுடன் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் நீா்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்கள் சுவாசிக்க 96 மணிநேரம் மட்டுமே ஆக்ஜிசன் உள்ளதாக கூறப்படுகிறது.







