வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால், சிபிஐ விசாரணை தேவையில்லையென நீதியரசர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அதிர்வலைகளுக்கு பின் சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நீதியரசர் சத்திய நாராயணன் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. டி.என்.ஏ. சோதனைக்கு வராத 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்புவது பற்றி நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. டி.என்.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என நினைக்கிறேன், இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரனை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ள மரபணு சோதனை, குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட முடிவுகள் வந்த பிறகு இந்த வழக்கின் தன்மை குறித்து கூற முடியும், இந்த வழக்கை பொறுத்தவரையில் அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது,
விசாரணையை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது ஏனென்றால் இந்த வழக்கின் தன்மை அப்படியானது.
இவ்வாறு நீதியரசர் சத்யநாராயணன் தெரிவித்தார்.







