கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் வழங்க உள்ளார். இதற்காக அவர் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய், இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலயம் சென்றடைந்தார். இதனையடுத்து திருச்சி விமானத்தில் இருந்து சாலை மார்கமாக கரூர் சென்றார்.

இதனைத்தொடர்ந்து கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சரும், தற்போது தவெகவில் இணைந்தவருமான எம்.ஏர். விஜயபாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது, “ என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. நிறைய வலிகள், காயங்களை தாண்டித்தான் வந்தேன். கரூர் சம்பவம்தான் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது. என் அக்கா தங்கைகளை கரூரில் இழந்தேன். கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்.

பெரம்பலூர் போறதுக்கு முன்னாடி, அங்க கூட்டம் அதிகமாக இருக்கும்னு பெரம்பலூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணாங்க. அதனால, பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மன வலியோட அங்கிருந்து போயிட்டோம். அதே மாதிரி, நாமக்கல் கூட்டத்தை முடிச்சுட்டு கரூர் வரும்போது, கரூர் போலீஸும் எங்களை அலர்ட் பண்ணியிருக்கலாமே. அந்த மீட்டிங்க ரத்து செய்ய போலீஸுக்கு அதிகாரம் இருந்தும் ரத்து பண்ணாம எங்கள அந்த இடத்துக்கு காவல்துறையே அழகா கொண்டு வந்து விட்ட நாடகத்தை முழுவதுமாக நம்பிவிட்டேன்.

மக்களை காக்க வச்சு அரசியல் ஆதாயம் தேடுற அரசியல்வாதி நான் கிடையாது. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். நமக்கு இவ்வளவு வலியும் காயங்களும் கொடுத்தவங்களுக்கு, 2026-ல் நீங்க தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அது மட்டும் பத்தாது; காலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ துவங்கப்படும்; தீயசக்தி மாதிரி நான் REEL தாய் மாமன் இல்லை, REAL தாய் மாமன்.

பேசுங்க, பேசுங்கனு சொல்றீங்க; பேசுனா, எழுந்து ஓடி போயிடுறீங்க. 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து புரோட்டா போட்டுட்டாங்க. பணமா? ஜனமா? என்று கேட்டால் எனக்கு ஜனம்தான் முக்கியம். நான் பேசுகிற மாதிரி, திமுகவால் வெளிப்படையாக பேசமுடியுமா? அந்த தில்லு இருக்கா? அந்த திராணி இருக்கா? ஒன்றும் கிடையாது. ஆனால் நம்ம மக்கள் அமைத்துக் கொடுத்த அரசை மட்டும் டிசைன் டிசைனாக குறை சொல்கிறார்கள்.

தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் கட்சி நிதி என்ற பெயரில் மாறி மாறி கொள்ளை அடித்திருக்கிறார்கள்; சட்டப்பேரவையில் நான் ‘கட்சி நிதி’ என்று தான் சொன்னேன். எந்தக் கட்சி, யார்?, என்னவென்று? எதுவுமே சொல்லவில்லை. ஆனால் ஓட்டம்பிடித்தனர். குற்றம் உள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும்

முந்தைய ஆட்சியில் சென்னையில் ஒரு பாலம் கட்டுறதுக்காக, சாதாரணமா ஆகுற செலவைவிட டபுள் மடங்கு செலவில் டெண்டர் விட்டிருந்தார்கள். அதையெல்லாம் தோண்டி கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம்; இன்னும் எத்தன கோடி தோண்ட தோண்ட வரும் என்று எங்களுக்கே தெரியவில்லை. ஒவ்வொரு முகமுடியா கிழிகிறது.

லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியாதுன்னு சொன்னவர்கள் எல்லாம், இப்போ ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கும் போய்ப் பாருங்க. ஒரு பைசா லஞ்சம், ஊழல் இல்லாமல் அனைத்து வேலைகளும் டக்கு டக்குனு நடக்குது.

தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும் வேற வேற இல்ல, கூட்டுக் களவாணிங்க; எங்களுக்குள்ள ஒட்டும் இல்ல, உறவும் இல்லனு அவங்களால சொல்ல முடியுமா, நிரூபிக்க முடியுமா?

மேகதாது அணையைப் பற்றி ஏன் பேசலன்னு கேக்குறாங்க. அரசியலுக்கு வந்ததில் இருந்து ஒரு கூட்டம் குறை சொல்லிக்கிட்டே இருக்கிறது. எங்களுக்கும் பாட்டுக்குப் பாட்டு கச்சேரி பண்ண தெரியும். மேகதாது விவகாரத்துல தமிழ்நாட்டோட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது ஆட்சியில இருந்தவர்கள் ஏன்ஒழுங்கா வாதாடவில்லை? இப்படியெல்லாம் பேசுறதுதான் மேகதாது பற்றி பேசுவதா? நம்ம உரிமையை எங்க நிலைநிறுத்தணுமோ, அங்க அதுக்கான வேலையைப் பார்ப்பதுதான் முக்கியம்; Talk less… Work more’தான் நம்ம பாலிசி.

என் மனசை விட்டு கரூர் எப்பவும் நீங்காது; நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை, வருங்கால தலைமுறைக்கு தெரியப்படுத்தனும்ல; இனி ஒரு அரசியல் சதியை, சூழ்ச்சியை யாரும் யோசிக்க கூடாது என்பதற்காக, கரூர்ல தவெக சார்பில் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.