மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணைகட்டும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்காக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். அதில், காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, மேகதாதுவில் அணைகட்டுகிறோம். மேகதாதுவில் புதிய அணைகட்டுவதால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நீர் பற்றாகுறை நிலவும் சூழலில், மேகதாது அணையை கட்டும் திட்டத்தை கர்நாடகா கைவிட வேண்டும் என்றும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுவதாகக் கூறுவது ஏற்புடைய அல்ல என்றும் கூறியுள்ளார்.
இந்த அணையை கட்டுவதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தினால், தமிழ்நாட்டிற்கு காவிரி உபரி நிரி கிடைக்காது என்றும் கர்நாடகா- தமிழ்நாடு இடையே நட்புறவு மேலும் நீடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.







