கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. கோதூர் ரோட்டில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாகவும், விரைவில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.







