திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், ஆகிய கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ,தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். இந்த நிலையில், மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக சுவாமி சண்முகர் பச்சை சாற்றி வீதியுலா வந்து அருள்பாலித்தார். முன்னதாக மேலக்கோயிலில் சுவாமி சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 36 வகையான அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசத்துடன் தரிசனம் செய்தனர். மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 6-ம் தேதி நடக்கிறது.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் புகழ்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரணேஸ்வரர் கோயிலின் இந்திரப் பெருவிழா சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டு, பின்னர் மேளம், தாளம் முழங்கிட கோயில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழா குழுவினர், பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாகவும், நவகிரகங்களில் புதனுக்குரிய தலமாகவும் திகழும் இந்தக் கோயிலில் 13 நாட்கள் இந்திரப் பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மேலும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேர்களில் ஆழத்து விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முதலில் ஆழத்து விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் என ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிட்ட கால இடைவெளியில் புறப்பட்டது. தேரானது சன்னதி வீதி, தென் கோட்டை வீதி ,மேற்கு கோட்டை வீதி வட கோட்டை வீதி வழியாக வந்தடைந்தது. தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மேலும் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி திங்கள்கிழமையான நாளை நடைபெற உள்ளது. இந்த தீர்த்த வரியில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து நாளை மறுநாளான செய்வ்வாய்கிழமை தெப்ப உற்சவம் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா










