ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் பொன்முடி, அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக செய்துகொண்டிருக்கும் அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார். ஆளுநர் அரசியல் பேசுவது தவறு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலையே கூறியுள்ளார். இனியாவாது ஆளுநர் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.
சிண்டிகேட், செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவதில்லை என ஆளுநர் குற்றம்சாட்டுகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தலைமைச்செயலகத்திலும் ஆன்லைனிலும் நடைபெற்றன.
பல்கலைக்கழகங்களில்தான் கூட்டம் நடத்த வேண்டும் என கூறும் ஆளுநர். ஏன் ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்துகிறார்? பல்வேறு குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சொல்கிறார் ஆளுநர்.
பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் ஆதிக்கம் செலுத்துகிறார். மீன்வளப் பலகலைக்கழக பட்டமளிப்பு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என கூறியிருக்கும் ஆளுநருக்கு, சிண்டிகேட் கூட்டத்தை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
அவருக்கு வேண்டியவர்களை திணிப்பதற்காக எந்த சட்டத்தையும் கொண்டுவரக்கூடாது. அவர் சொல்லும் ஆட்களெல்லாம் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்களிடம் ஏதாவது கூற நினைத்தால் நேரடியாக கூறலாம். ஆனால் ஏன் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதா குறித்து பேசியதற்காகவே எங்கள் மீது வழக்கு போடப்பட்டது. ஆளுநர் எந்த அரசியல் செய்தாலும் அது எடுபடாது” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







