மாண்டஸ் புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
மாண்டஸ் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத் தென்கிழக்கு தற்போது மாண்டஸ் புயலானது நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஸ்ரீஹரி கோட்டா விற்கும் புதுவைக்கும் இடையே மகாபலிபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் குறித்த பிரதேச செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டியில், வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 390 பகுதிகள் கண்டறியப்பட்டு உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்க 290 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 12 துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 33 குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. புயலுக்குப் பின் 134 மரம் அறுக்கும் இயந்திரம் ,80 ஜே.சி.பிக்கள் ,106 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
அத்துடன், கடலோர பகுதிகளில் வசித்து வரும் 6023 குடும்பங்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளன. உதவிக்காக 24 மணி நேரம் செயல்படும் வகையில் வாட்ஸ் அப் மற்றும் தொலைப்பேசி மூலம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான பணிகளை கண்காணிக்கச் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், தேவையான போக்குவரத்து வசதி மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புயலுக்குப் பின் மின்சார வசதி விரைவாகக் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு புயல் கரையைக் கடப்பதால் இரவு 8 மணிக்கு மேல் மாமல்லபுரத்தில் எந்த சுற்றுலாப் பயணிகளும் வராது வண்ணம் தடுத்து நிறுத்தப்படுவர் என கூறினார்.
மேலும், நியூஸ் 7 தமிழ் நேரலையின் எதிரொலியாகக் கடற்கரையோரத்தில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெளியேற்ற காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








