தமிழ் சினிமாவில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, ’’ஆகாய கங்கை’’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்ட நடிகரான இவர் தயாரிப்பாளராக, இயக்குநராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.
திருவாரூர் அருகே நன்னிலத்தை பூர்வீகமாக கொணட மனோபாலா சிறுவயது முதலே சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்தாலோ என்னவோ, கல்லூரி படிப்பை முடித்த உடனயே வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல், ரயில் ஏறி சென்னை கிளம்பி வந்துவிட்டார். இங்கு வசித்து வந்த தனது அக்காவின் வீட்டிற்கு சென்றவர், அங்கு தங்கி படங்கள் பார்ப்பதை வேலையாகவும், சினிமாவில் உதவி இயக்குநராகச் சேருவதை இலக்காகவும் கொண்டு செயல்பட்டு வந்தார்.
நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, ஒரு பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கிய மனோபாலாவிற்கு நடிகர் கமல்ஹாசனின் நட்பு கிடைத்து, அதன்மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேரும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பும் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்து விடவில்லை. அந்த நேரம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பாக்யராஜ் , சுவரில்லாத சித்திரங்கள் படத்தினை இயக்குவதற்காக சென்றதால் தான், அந்த வாய்ப்பு மனோபாலாவிற்கு கிடைத்தது.
உதவி இயக்குநராக புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜாவிடம் பணியாற்றினார். அதற்கு பிறகு இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தவர் கோபுரங்கள் சாய்வதில்லை, ராசா மகன், தோழர் பாண்டியன் போன்ற படங்களிலும் பணியாற்றினார்.
இந்த சமயம்தான் மனோபாலாவிற்கு நடிகர் மோகனின் அறிமுகம் கிடைத்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா.
இந்த நேரம் இயக்குநராக அவதாரம் எடுக்க முடிவு செய்த மனோபாலா, முதன்முதலில் கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாய கங்கை படத்தை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருந்தும் மனம் தளராமல் அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த மனோபாலா, அதற்கு கதாநாயகனாக மோகனை நடிக்க வைக்க கேட்டுள்ளார். நடிகர் மோகனும் மனோபாலா மீது கொண்ட நட்பு காரணமாக வாய்ப்பு தர, அவர் அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வி அடைந்தது. இளையராஜா தயாரித்த இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ என்றாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
பாரதிராஜாவிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவரான மனோபாலா, தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்று எண்ணும் அளவிற்கு மனச்சோர்விற்கு ஆளானார். இந்த நேரம் கலைமணியின் மூலம் ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ‘மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும்’ என்று இதர தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.
இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான மனோபாலா திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார். வெக்காளியம்மனிடம் வேண்டிக்கொண்ட நேரமோ என்னவோ, மனோபாலாவை மீண்டும் அழைத்த கலைமணி, “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா நீதான் அந்த படத்தை இயக்கனும் என்று கண்டிஷனா போட்ருக்காரு” என்று சொன்னதை கேட்டதும் , மனோபாலாவிற்கு ஒரே ஆனந்தக் கண்ணீர் வந்தது. வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் ஆதரிக்க முன்வந்த நடிகர் மோகன், அப்போது பல படங்களில் ஹீரோவாக அதுவும் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததார். அதனால் இரவு நேரங்களில் நடித்துத் கொடுக்கிறேன் என்று சொல்லி, அதற்கு ஏற்றார் போல், இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் பிள்ளை நிலா. இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.
இதனையடுத்து ரஜிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், விஜயகாந்தை வைத்து என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சிறை பறவை , சத்யராஜை வைத்து மல்லுவேட்டி மைனர், கருப்பு வெள்ளை, நந்தினி, நைனா உள்ளிட்ட 20 -கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.
இதற்கிடையில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா, நட்புக்காக படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். அதிலும் தனது தனித்துவ குரல் மற்றும் அதற்கான பிரத்யேக மாடுலேஷன், அவற்றிற்கு ஒத்துபோகும்படியாக இருக்கும் அவரது ஒல்லியான தேகம் ஆகியவற்றால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பரிணமிக்க ஆரம்பித்தார்.
அப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் தவிர இன்றைய தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயன், சந்தானம், விமல் போன்றவர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் குறிப்பாக விமல், சந்தானத்துடன் இவர் நடித்த கலகலப்பு முதல் பாகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இவர் சேர்ந்து செய்யும் லூட்டிகள் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும்.
அப்படி நம்மையெல்லாம் மகிழ்வித்த மனோபாலா, தான் நடிக்கும் படத்தில் சிறிய வேடம் என்றாலும் சரி, மிக குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகள் என்றாலும் சரி எப்போது அவர் அதில் இருந்து பின்வாங்கியதில்லை. ஒரு கட்சியாக இருந்தாலும், அதனை முகம் சுளிக்காமல், தான் ஒரு பெரிய இயக்குநர் என்ற எண்ணமும் இல்லாமல் அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு, காட்சிக்குத் தேவையானதை நடித்துவிட்டு போகும் அருமையான மனிதர். அதுவும் சாதாரண நடிகராக இருந்தாலும் சரி, பெரிய நடிகராக இருந்தாலும் சரி எந்தவித ஈகோவும் பார்க்காமல் வெகு இயல்பாக எல்லோரிடமும் அன்பாகவும், நட்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
அப்படிப்பட்டவருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குநர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமல்ஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
இதுதவிர, இயக்குநர், நடிகர், என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த மனோபாலா சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 (இன்னும் ரிலீசாகவில்லை) ஆகிய படங்களை தயாரித்தார். திரையுலகை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில், இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து, அதனை தனது youtube சேனல்களிலும் பதிவிட்டு வந்தார். மேலும் Manobala’s Waste Paper என்ற youtube சேனலையும் ஆரம்பித்து அதில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்ட மனோபாலா, பல திரையுலக நட்சத்திரங்களிடம் பேட்டி எடுத்து பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்கள் வரை அத்தனை பேரிடமும் நட்பு பாராட்டும் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். 69 வயதான நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.














