பெரியகுளம் கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த மாதம் இறுதியில் அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி போன்ற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்தனர். எனவே கடந்த ஐந்து நாள்களை தொடர்ந்து 6-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை கும்பக்கரை அருவிப்பகுதியில் தொடர் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து வெள்ளவரத்து குறித்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
—அனகா காளமேகன்







