அரசு தாய் சேய் நல மருத்துவமனையில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மடவாரியர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவிக்கு விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சுரேஷின் மாமியாருக்கு தொடர்புடைய கண்ணன் (55) என்பவர், குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதை விரும்பாத சுரேஷ், என் குழந்தையை பார்க்க ஏன் வந்தாய் என கண்ணனுடன் சண்டையிட்டுள்ளார்.
இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, கட்டி உருண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தி உள்ளார். கண்ணனும் பதிலுக்கு தன் மீது குத்தப்பட்ட கத்தியால் சுரேஷை தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த கண்ணனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டு, கத்தியால் குத்திக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







