ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், மாற்றுத் திறனாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பெகுசாரை (Begusarai) மாவட்டத்தில் உள்ள பண்டேபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் சஹானி (50). மாற்றுத் திறனாளியான இவர் வெள்ளிக்கிழமை அன்று தனது கிராமத்தில் உள்ள குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்றார். நீண்ட நேரமாக அங்கிருந்ததால், அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.
வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடிப்பதற்காகத் திரும்பினார். அப்போது வழியில் தண்ணீர் பானை ஒன்று இருந்தது. அதிக தாகம் காரணமாக அதிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து குடித்தார் சோட்டே லால். அந்த தண்ணீர் பானை, தினேஷ் சஹானி என்பவருக்கு சொந்தமானது. இதைக் கண்ட தினேஷும் அவர் மகனும் இங்கு எப்படி தண்ணீர் குடிக்கலாம் என்று கூறி, அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், சோட்டே லாலை, கம்பால் சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்த சோட்டே லால், தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்தார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரை, அக்கம் பக்கத்தினர் பணம் கொடுத்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தினேஷ் சஹானியை கைது செய்துள்ளனர்.
ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்ததற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.







