சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்ற முதியவர், அந்தப் பகுதியில் மாடு மேய்த்து வருகிறார். அவரது 15 வயது பேத்திக்கு கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அந்த சிறுமியிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் பல வெளிவந்தன.
தனது தாத்தா கோவிந்தராஜ் தன்னை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்தார். மேலும் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கோவிந்தராஜை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.







