கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக் கூறி வீட்டை வாடகை எடுத்து தங்கி இருந்த இளைஞரின் வீட்டை சோதனை செய்த போது, ஏர்கன் துப்பாக்கி, இரண்டு வாள்கள், போலி தங்க கட்டி, போலி ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எர்வின் என்ற எவின்ஸ் என்பவர் தங்கராஜிடம் தான் ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி அவரது வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
எவின்ஸ் மீது ஏற்கனவே தங்கராஜுக்கு சந்தேகம் இருந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு எவின்ஸ் வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணத்தை காணவில்லை என தங்கராஜிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் தரலாம் என தங்கராஜ் கூறியதற்கு, எவின்ஸ் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, எவின்ஸ் தங்கி இருந்த வீட்டை சோதனையிடுமாறு போத்தனூர் போலீசாருக்கு தங்கராஜ் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக எவின்ஸ் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கேரள மாநிலம் தலையோலப்பறப்பு காவல் நிலையத்தில் எவின்ஸ் மீது கொள்ளை வழக்கு இருப்பதும், அந்த வழக்கில் திருப்பூரில் கேரளா போலீசாரால் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நேற்று இரவு எவின்ஸ் தங்கியிருந்த வீட்டை திறந்து சோதனையிட்டனர்.
அதில் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க கட்டிகள், அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், ரப்பர் ஸ்டாம்புகள், ஏர்கன் துப்பாக்கி, இரண்டு வாள்கள் ஆகியவை இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சௌம்யா.மோ






