தமிழ்நாட்டில் நீண்ட காலமாக தொடரும் திமுக Vs அதிமுக என்கிற இருதுருவ அரசியல் தொடர்கிறதா? களம் மாறுகிறதா? இந்த கேள்விக்கு காரணம் என்ன? இது குறித்து விரிவாக பார்க்கலாம்….
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டு அரசியல் களம் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என்று தொடங்கியது. பின்னர், காங்கிரஸ் – நீதிக்கட்சி என்று மாறியது. இதையடுத்து 1960-களில் காங்கிரஸ் – திமுக என்றாகியது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணா திமுகவை தொடங்கிய பிறகு திமுக – அதிமுக என்று தொடர்கிறது. குறிப்பாக கருணாநிதி – எம்.ஜி.ஆர், கருணாநிதி – ஜெயலலிதா என்கிற இரு துருவ அரசியல் நீண்ட காலம் இருந்தது. அண்ணா தொடங்கிய திமுக, அண்ணா பெயருடன் உள்ள அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சிகளாக, ஆளும் கட்சிகளாக இருக்கின்றன.
திமுகவின் கட்டுக்கோப்பு
இந்த இரண்டு கட்சிகளில் இருந்தும் தலைவர்கள் விலகி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். காலப்போக்கில் மீண்டும் தாய்க்கழகத்துடன் இணைவது அல்லது கூட்டணிக் கட்சியாக தொடர்வதும், கடந்த 2016 – ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டனி போல் மூன்றாவது அணி முயற்சி உள்ளிட்டவை அவ்வப்போது நடந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக- திமுக என்கிற இருதுருவ அரசியல் இப்போதும் தொடர்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. திமுகவின் நீண்ட கால தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுக்கோப்பாக இருக்கிறது. மக்களவை, உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர் வெற்றிகளை அக்கட்சி பெற்றும் வருகிறது என்கிறார்கள்.
சிதறிய அதிமுக வாக்குகள்
ஆனால், அதிமுகவின் நீண்ட காலப் பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அப்படி இல்லை என்கிறார்கள். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக என்கிற தனிக்கட்சி, ஓபிஎஸ், சசிகலா என தனி அணிகள் என அதிமுக வாக்கு வங்கி நான்காக சிதறிக் கிடக்கிறது.
இதைப் பயன்படுத்தி, அதிமுக இடத்திற்கு வர பாஜக முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு, ஒருங்கிணையாத அதிமுக வாக்கு வங்கியால், அக்கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தீவிரம் காட்டும் பாஜக
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஆனால், மக்கள் மன்றத்தில் நாங்க தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாஜக சொல்கிறது. அந்த கட்சி தலைவர்களின் பேச்சும் செயலும் அப்படித்தான் இருக்கின்றன. விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். தாமரை மலரும் என்று சொல்லி வருவதையும் அடிக்கடி கேட்க முடிகிறது.
குறிப்பாக, அதிமுக உட்கட்சிப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க, அடுத்தடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான கருத்து மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் என பாஜகவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது என்கிறார்கள். ஊழல் எதிர்ப்பு என்கிற புள்ளியில் இரண்டு கட்சிகளையும் ஒரு புள்ளியில் நிறுத்த பாஜக நினைக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
நாங்க தான் பிரதான எதிர்க்கட்சி – இபிஎஸ்
இந்நிலையில், ’’அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. மக்கள் பிரச்சினைகளை தங்கு தடையின்றி அரசின் கவனத்திற்கு அதிமுகதான் கொண்டு செல்கிறது. நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தன்மை இருக்கிறது. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி தெரியும். அதுவரை அவரவர் கட்சி நலனுக்காக மட்டுமே பேச முடியும்.
திமுக கூட்டணி போல அப்படியே ஒட்டிக் கொண்டிருக்க முடியாது’’ என்று அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையடுத்து ஆளுநருடன் சந்திப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்கள் என எதிர்க்கட்சி அரசியலை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
’’மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’’
இதேபோல், “சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது” என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட அறிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், ‘’ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால், திமுகவை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வரலாம்’’ என்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அதுமட்டுமின்றி, ’’எப்போதும் திமுக – அதிமுக என்றுதான் தமிழ்நாட்டு அரசியல் களம் இருக்கும். ஆனால், இதை மறைத்து மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’’ என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போன்றவர்கள் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் களம் என்பது திமுக – அதிமுக என்று தொடர்வதே மாநிலத்திற்கு நன்மை பயக்கும். மாநில சுயாட்சி, இரு மொழிக் கொள்கை, இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. மாநில உணர்வுகளை மதிக்காத, உரிமைகளை கண்டுகொள்ளாத பாஜக போன்ற தேசியக் கட்சியின் ஆதிக்கம் மாநில மக்கள் நலனுக்கு எதிராகவே முடியும் என்கிறார்கள் திராவிட இயக்க மூத்த தலைவர்கள்.
இப்போதும், திமுக – அதிமுக என்றே தமிழ்நாட்டு அரசியல் களம் தொடர்கிறதா? இல்லை திமுக – பாஜக என்று களம் மாறுகிறதா? மாறுவது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறதா? கள யதார்த்தம் என்ன ? மக்கள் தீர்ப்பு என்ன…? காத்திருப்போம்….







