நடிகை ஸ்ரேயா ரெட்டி சலார் படத்தில் தனது உதவியாளர்களுக்கு தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.
’திமிரு’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் பெயர்பெற்ற நடிகை ஸ்ரேயா ரெட்டி தெலுங்கில் பிரபாஸ், பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ’சாமுராய்’ படத்தில் ஒரு பாடலில் நடித்த இவர் அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் வெயில், காஞ்சிவரம் போன்ற படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தமிழில் அண்டாவ காணோம் படத்திலும் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடித்த ’சுழல்’ வெப் தொடரில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்து வருகிறார். மேலும், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள ஓஜி படத்திலும் இணைந்துள்ளார்.
சலார் படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த காட்சிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்நிலையில், படத்தில் தனக்கு உதவியாளர்களாக இருந்தவர்களுக்கு நிறைவு நாளில் தங்கக் காசுகளைப் ஸ்ரேயா ரெட்டி பரிசளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.







