மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை போலீஸார் கைது செய்து, சாராய பாட்டில்கள் மற்றும் ஊறல்களைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர், கோமதிபுரம் மல்லிகை வீதியில் உள்ள வீடு ஒன்றில்
சந்தேகத்திற்குரிய வகையில் வசிக்கும் நபர் ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக அண்ணா
நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மல்லிகை வீதியில் உள்ள புகாருக்குள்ளான வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அந்த வீட்டில் வசித்து வருபவரிடம் விசாரணை நடத்தியபோது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீ ரங்கபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவரஞ்சித் (33) என்பதும், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டின் அருகே உள்ள புதரில்
அடுப்பு வைத்து குக்கர் உதவியுடன் சாராயம் காய்ச்சி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 16 சாராய பாட்டில்கள் மற்றும் இரண்டு பெரிய
பீப்பாய்களில் போடப்பட்டிருந்த சாராய ஊறல், கஞ்சா, பணம், இருசக்கர வாகனம்,
செல்போன், ஆயுதங்கள் மற்றும் மான் கொம்புகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து சிவரஞ்சித்தை கைது செய்தனர்.
மதுரை நகரில் மையப் பகுதியில் வீட்டிலேயே ஒருவர் சாராயம் காய்ச்சி வந்துள்ள
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா





