தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் – ஆளுநர் அர்லேக்கர்…!

தமிழ் நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என ஆளுநர் அர்லேக்கர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் 17 அவது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூடியது. முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கருக்கு உரையாற்றினார். அவரின் உரையில் மேகதாது, இருமொழிக்கொள்கை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்ததன.

ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் தமிழில் ‘வணக்கம்’ என கூறி உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:

தமிழக அரசியல் வரலாற்றில் விசில் புரட்சியை கொண்டுவந்துள்ளார் விஜய். 1967, 1977-ல் அண்ணா, எம்.ஜி.ஆர் அரசியலில் ஏற்படுத்தியதை போல, 2026-ல் தமிழ்நாட்டில் வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை இருக்கிறது. தொடர்ந்து இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும். கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாக திகழும் இந்த அரசு, கடந்த 74 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை செய்து காட்டியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய, ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும் தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப்பகிர்வை மத்திய அரசிடம் இருந்து பெறுவது உறுதிசெய்யப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிக மோசமான சீர்க்கேட்டை சந்தித்துள்ளது. முதலமைச்சர் விஜய் உறுதியளித்தபடி, கடந்தகால அரசின் தவறான நிதி நிர்வாகத்தின் மறைக்கப்பட்ட உண்மை நிலையை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கலாச்சாரம் வேரூன்றி உள்ளது. இதனை கட்டுப்படுத்த கடந்த அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு, முதற்காரணம் மாநிலத்தில் பரவலாக கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம் தான்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழுமூச்சுடன் செயல்படும்; இதற்காக போதைபொருள் தடுப்பு சிறப்புப்படை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே, உண்மையான சமூகநீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை. இந்த கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைவாக முடிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்கு ஆய்வினை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.