உகாண்டாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வந்த ரூ. 8.86 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அடிஸ் அபாபா நகரில் இருந்து நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தாண்சானியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பேட்டரிக் (37) என்ற பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார்.
அந்த தாண்சானியா நாட்டு பயணி ஜோசப் பேட்ரிக் மீது, சுங்கு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அந்தப் பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்சூல்கள் பல விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக ஜோசப் பேட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் உள்ள கேப்சூல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினர். இன்று காலை வரை அந்தப் பணியை நடைபெற்றது. அவருடைய வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சூல்கள் வெளியே வந்தன. அவர் விழுங்கி வந்திருந்த கேப்சூல்களை, சுங்க அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது, அவற்றில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர். 86 கேப்சூல்களிலும் மொத்தம் 1.256 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 8.86 கோடியாகும்.
இதையடுத்து, சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியைக் கைது செய்தனர். அவரிடமிருந்த ஹெராயின் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனா். அவரை மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இவரிடம் இந்த போதைப் பொருளை கொடுத்து அனுப்பியது யாா்? சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தாா்? என்று விசாரணை நடக்கிறது.
சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்கள் என்றும் விசாரிக்கின்றனா். தாண்சான்யா நாட்டு பயணி ஒருவரிடம் இருந்து ரூ. 8.86 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








