கட்சத் தீவு இலங்கையிடமிருந்து மீட்கப்படுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக எம்.பி வில்சன் கச்சத் தீவு தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக 3 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
1) 1974 மற்றும் 1976ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க இந்திய அரசு ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறதா?
2) கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதா?
3) அப்படி தொடங்கப்பட்டிருந்தால் அது குறித்த விபரங்களை அளிக்க வேண்டும், பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதிலாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வழங்கியுள்ளார். அதில் ”இலங்கையுடனான கடல் எல்லைகள் வரையறை ஒப்பந்தங்களை 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளிலேயே இந்திய அரசு மேற்கொண்டு முடித்துவிட்டது. அந்த ஒப்பந்தங்களின்படி இந்திய, இலங்கை சர்வதேச கடல் எல்லை கோடு பகுதியில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் வருகிறது. தற்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என வெளியுறவுவத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.







