திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளை கும்பலின் தலைவன் உட்பட இருவரை ஹரியானாவில் தமிழ்நாடு போலீசார் கைது செய்து டெல்லியில் விமான மூலம் சற்று முன் சென்னை அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து 4
ஏ.டி.எம்களில் கொள்ளை நடைபெற்றது. ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் எடுக்கும் எந்திரங்களை கேஸ் வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரம் பணத்தை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்துக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கர்நாடகா, குஜராத், ஹரியானா மாநிலங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் இரண்டு பேரையும் எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்பட்ட காவல் துறையினர் ஹரியானாவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழ்நாடு தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலத்தில் இருந்து விமான மூலம் தற்போது சென்னை விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு, மேலும் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தற்சமயம சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட இந்த ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு எவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் இருக்கின்றார்களா என்பன போன்ற பல விசாரணைகள் மேற்கொள்ள இருக்கின்றனர். விசாரணைக்கு பிறகு ஏடிஎம்
கொள்ளை தொடர்பாக மேலும் தகவல்கள் வெளிவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.