ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் வாக்காளர்கள். தேர்தல் நாள் அவர்களுக்கான அதிகாரத்தைக் சொல்லும் தினம் என்பார்கள். அந்த தேர்தல் முடிவுகளையே தீர்மானிக்கும் வகையில் ஒரு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது என்ன குற்றச்சாட்டு பார்க்கலாம்….
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் உளவு பார்த்ததாக சர்ச்சை ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தகவல்களைத் திருடியதாக அங்கும் சர்ச்சையானது.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு குற்றச்சாடு எழுந்துள்ளது. இப்போதும் இஸ்ரேலிய நிறுவனத்தின் மீதுதான் விரலை நீட்டுகிறார்கள். இங்கிலாந்தின் தி கார்டியன் செய்தியாளர்கள் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில், இஸ்ரேலை மையமாகக் கொண்ட டீம் ஜார்ஜ் என்கிற குழுவினர், பொய்யான தகவல்களைப் பரப்பி, 30 நாடுகளின் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி, முடிவு தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் அந்த குழுவின் செயல்பாடுகள் இருந்துள்ளன என்றும் இதன்படி, ’சமூக ஊடக பக்கங்களில் ஊடுருவி, தவறான தகவல்கள், போலி செய்திகளை பரப்பியும், அதன் மூலம் தேர்தலின் முடிவுகளையே மாற்றும் வகையில் செயல்பட்டுள்ளனர் ’என்று கூறப்படுகிறது. ’இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணையை உடனே நடத்த வேண்டும். மத்திய அரசு மவுனம் கலைய வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவரும் முன்னாள் பத்திரிகையாளருமான சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், ’இந்திய தேர்தல்களின் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் தவறான தகவல்களையும் போலி செய்திகளையும் பரப்புவதில்
இஸ்ரேயில நிறுவனமான ‘டீம் ஜார்ஜ்ஜுக்கும்’, பாஜகவின் ஐடி விங்கும் தொடர்பு இருப்பதாகவும்’ சொல்லி, முன்னூதாரணமாக, பெகாசஸ் உளவு விவகாரத்தையும் நினைவூட்டுகிறார்.
மேலும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான, பவன் கெரா கூறுகையில், ’ஆளும் கட்சியால் இந்தியாவின் ஜனநாயகம் ‘‘ஹை ஜாக்’’செய்யப்படுகிறது. தேர்தல்களில் முடிவை மாற்ற, அதற்கான தாக்கத்தை ஏற்படுத்த இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியை பெற்று, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிராக சதி செய்துள்ளனர் ’என்கிறார்.
குஜராத் வன்முறை குறித்த பிபிசி ஆவணப்படம். அதானி நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை வரிசையில் இப்போது இந்திய தேர்தல்களில் இஸ்ரேலின் டீம் ஜார்ஜ் தலையீடு விவகாரம் அடுத்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது, மத்திய அரசு தரும் தக்க பதில்களால் முற்று பெறுமா ? இல்லை சர்ச்சை தொடருமா? அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.
யார் இந்த டீம் ஜார்ஜ்
‘டீம் ஜார்ஜ்’ என்ற அழைக்கப்படும் இந்த குழு தல் ஹனான் என்பவர் தலைமையில் இயங்குகிறது. இந்த குழுவில் ஹேக்கிங் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற பலர் உள்ளனர். இவர்கள் பல நாட்டு தேர்தல்களின் போது தங்களது செயல்பாடுகளால் முடிவுத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. குழுவை வழி நடத்தும் தல் ஹனான்தான் ‘ஜார்ஜ்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேலிய உளவு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண…







