மகாத்மா காந்தி பிறந்தநாள் : தலைவர்கள் புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

My life is my message: சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்.

இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள்.

தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார்.

அதனால்தான், ‘என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி’ என அவரால் கூற முடிந்தது.

அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது திராவிட மாடல் ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம்.

காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:

சத்தியம், அகிம்சை, எளிமை மற்றும் அறவழிப் போராட்டம் ஆகியவற்றை தனது வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்த தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று!

தன்னலமற்ற சேவை, சமூக நல்லிணக்கம், ஏழை எளிய மக்களின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்ற அவரது உயரிய சிந்தனைகள், இன்றும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக திகழ்கின்றன. அவர் கடைப்பிடித்த எளிமையும், உண்மைக்கான உறுதியும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் வாழ்வியல் பாடங்களாகும்.

மகாத்மா காந்தி அவர்களின் சத்தியம் மற்றும் அகிம்சை வழியை நினைவில் கொண்டு, நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசின் பேரரசை அசைத்துப் பார்த்த அறத்தின் திருவுருவம்!

சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றைத் தன் வாழ்நாளெல்லாம் மூச்சாகக் கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுத்த மாமனிதர்!

உடையைத் துறந்து, எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலகரங்கில் உயர்த்திய ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று,

தாய்த்திருநாட்டிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளைப் போற்றி வணங்குவதோடு, மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராடி, இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவரும், அகிம்சை எனும் மந்திரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் வரலாற்றையே புரட்டிப்போட்டவருமான தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று.

எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றோடு, சத்தியத்தை ஆயுதமாகவும், அகிம்சையைப் பாதையாகவும் கொண்டு, மானுட நலனுக்காகவும், உயர்வுக்காகவும் ஓயாமல் உழைத்த மகாத்மா காந்தியடிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.