தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில், ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து, இந்தியில் பெயர்கள் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு, இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று தெரிவித்துள்ளார்.




