சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில், ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் ஹிந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




