மதுரையில் மழைநீர் வடிகால்கள் குறித்தும், குண்டும் குழியுமான சாலைகளுக்கு மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் நாளை நாள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொள்கிறது.
பொறுப்பும், பொதுநலனும் என்பதை கடந்து மக்கள் பிரச்னைகளை அரசுக்கு அவ்வப்போது எடுத்து கூறி, அதற்கான தீர்வு காணும் நடவடிக்கையில் நியூஸ் 7 தமிழ் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது. ஒவ்வொரு செய்திகளையும், செய்திகளாக மட்டுமே கடந்து செல்லாமல் ஊடக துறையில் யாரும் மேற்கொள்ளாத புது புது முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் நியூஸ் 7 தமிழ் நடத்தும் கள ஆய்வு பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் இதில் தனி கவனம் செலுத்தி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. பள்ளி கட்டடங்கள் சேதம், சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் குறித்து மக்கள் புகார், சேலத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்டவை தொடர்பாக நாம் முன்னெடுத்த களஆய்வின் நோக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்பட்டன.

அந்த வகையில், பருவ மழையையொட்டி சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அண்மையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைகாலத்திற்குள் சாலை பணிகள், வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன் விளைவாக சிறப்பு அதிகாரிகளை அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நாளை மாமதுரையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் களம் இறங்குகின்றனர். ‘மாமதுரை அவலங்கள், பிரச்னை என்ன? தீர்வு என்ன?’ என்ற தலைப்பில் நாளை நாள் முழுவதும் கள ஆய்வு நடைபெறுகிறது. கழிவுநீர் ஓடைகளாகும் மழைநீர் வடிகால்கள், குடிநீரில் துர்நாற்றம், குண்டும் குழியுமான சாலைகள் இதனை பற்றியும் இதற்கு மதுரை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் விரிவாக நேரலையில் ஒளிப்பரப்பப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்







