இந்திய அணி 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்து, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசதியுள்ளது.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணமாக வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வரும் நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் தேம்ம பவுமா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அதிரடியாக தொடங்கினர். இந்த ஜோடியை பிரிக்க தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோகித் சர்மா வெளியேறினார். பின்னர் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோரும் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல்.ராகுல் 57 ரன்களும், விராட்கோலி 49 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து, 238 ரன்கன் என்ற கடினமான இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி தற்போது விளையாடி வருகிறது. முன்னதாக விளையாட்டு மைதானத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர் ஊழியர்கள் அதனை பிடித்து அப்புறப்படுத்தினர். அதேபோல், தென்னாப்பிரிக்கா அணி விளையாட்டை தொடர்ந்ததும் 2-வது ஓவரில் மின்விளக்கு பிரச்னை ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டு மீண்டும் இந்திய வீரர்கள் பந்து வீச்சை தொடங்கியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.