ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாகப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்ஓட்டுனராக பணிபுரிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செந்தில் என்பவர் ஓய்வுபெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவரது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்த தண்டனையை நிறைவேற்ற முடியாததால் அதற்கு ரூபாய் 75 ஆயிரம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
பணம் செலுத்திய பிறகே பணி முடிவு நற்பயன் பிரிவுக்கு பணிப்பதிவேடு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டதால் பணத்தைச் செலுத்தி ஓட்டுநர் செந்தில் ஓய்வுபெற்றார். இந்நிலையில், பணம் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்யவும், செலுத்திய பணத்தை 18% வட்டியுடன் திரும்ப வழங்கக்கோரி செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரிடம் பிடித்தம் செய்த பணத்தை 4 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும், ஓய்வுபெற ஒரு ஆண்டு உள்ளவர்களிடம் பணம் பிடித்தம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு விசாரித்தது பிறப்பித்த உத்தரவில், “ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாகப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது. ஓய்வுபெற்ற ஓட்டுநர் செந்திலிடம் பிடித்தம் செய்த பணத்தை 12 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும். தவறினால் வரும் ஜூலை மாதம் 20-ம் முதல் 6% வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.







