சேலம் அருகே விவசாயியை தாக்கிய வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன். இவர் தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்று மது அருந்தி விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தார்.
அப்போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில், முருகேசனை போலீசார் மடக்கினர். மது போதையில் இருந்த முருகேசன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சோதனை சாவடியில் இருந்த போலீசார் ஒருவர், முருகேசனை சரமாரியாகத் தாக்கினார்.
இந்நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
முருகேசனை போலீசார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் விவசாயியை தாக்கிய விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.







