மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

மதுரையில் டைடல் பார்க் கட்டுமான வடிவமைப்புப் பணி தொடர்பாக டாடா மகேந்திரா உள்ளிட்ட ஒன்பது கட்டுமான நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மதுரையில் இரண்டு கட்டங்களாக பத்து…

மதுரையில் டைடல் பார்க் கட்டுமான வடிவமைப்புப் பணி தொடர்பாக டாடா மகேந்திரா உள்ளிட்ட ஒன்பது கட்டுமான நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

மதுரையில் இரண்டு கட்டங்களாக பத்து ஏக்கர் பரப்பில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாட்டுத்தாவணி பகுதியில் முதல் கட்டமாக 5.6 ஏக்கர் நிலத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ள தகுந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து கடந்த மாதம் ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. இதில் பங்கேற்க விரும்பிய இந்தியாவை சேர்ந்த டாடா, மகேந்திரா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த மெய்ன்ஹார்ட் சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகம்!!

இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதிலளித்துள்ளது. மேலும், ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க கடந்த 24 ஆம் தேதி கால அவகாசம் முடிந்த நிலையில், அதனை அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து டைடல் பார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்குகளை கொண்ட கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.