ஜப்பான் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடல்!

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். சென்னையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை…

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு, கடந்த மே 25-ம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் சென்றடைந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோமாட்சு நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனம். இந்நிறுவனம் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து வருகிறது.

இந்த கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் டகாயுகி புரோகுஷி மற்றும் கோ.கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சரின் இந்த கோரிக்கைக்கு, அந்நிறுவன அதிகாரிகள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.