ஐடி ரெய்டின்போது முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக புகார் – 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

கரூரில் வருமான வரி சோதனையின் போது, முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக அதிகாரிகள் மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு…

கரூரில் வருமான வரி சோதனையின் போது, முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக அதிகாரிகள் மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.

கரூரில் நேற்று நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அடையாளம் தெரியாத 5 நபர்கள் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, ஐந்துக்கும் மேற்பட்ட நபர் கூடியது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சோதனையின் போது வீட்டின் வெளியே திரண்ட குமார் மற்றும் மேலும் சிலரை தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில், கையால் தாக்கியது, தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.