மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுமார் 500கிலோ அளவிலான பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பிரசித்தி பெற்ற அயன் அனஞ்ச பெருமாள் மற்றும் கல்யாண கருப்பசாமி ஆலயம். இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
இப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக 16 வகையான அபிஷேகம் சுவாமிக்கு செய்யப்பட்டு மகா தீபாதரனை காண்பிக்கப்பட்டன. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுமார் 116 புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டன.
அவற்றை கோயிலை வலம் வந்து கோபுரங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. அப்போது குழுமியிருந்த பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என முழக்கமிட்டு காண்போரை பக்தி பரவசத்திற்கு உள்ளாக்கியது.
அப்போது ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டப்படி மூன்று முறை வலம் வந்து சுமார் 500 கிலோ அளவிலான பூக்களை தூவியது. விழாவில் மதுரை ஆதீனம் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேந்தன்







