மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். மதுரை மாநகராட்சிக்கு 30 லட்சம் மதிப்பிலான நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் வழங்கியது. இதனையடுத்து நவீன இயந்திரத்தின் வழியாக பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணியினை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்:
“மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்க்காக விரைவில் திருப்பணிகள் தொடங்கப்படும். முதலமைச்சர் விரைவில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவை நியமிக்க உள்ளார். பாதாள சாக்கடை அடைப்புகளை எடுத்தல், கழிவுகளை உறிஞ்சி எடுத்தல் மற்றும் அடைப்பு எதனால் ஏற்பட்டது என 3 பணிகளை செய்யும் கருவி மாநகராட்சி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் இருப்பது போல பாதாள சாக்கடை அமைப்புகளை சரி செய்ய சூப்பர் சக்கர் வாகனம் மதுரை மாநகராட்சிக்கு வாங்கப்படும்.
மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு வகையான புதிய நவீன இயந்திரங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களே மனித கழிவை எடுக்க கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் போன்ற பணிகளில் வெளிநாடுகளில் மனிதர்கள் இறங்காமல் வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்படும்.
பாரம்பரியமிக்க பழமையான தமிழகத்தில் பல இடங்களில் வரைபடம் இல்லாததால் பணிகளை செய்ய முடியவில்லை. அவசரத்திற்காக தவறான வழியில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறக்கி விடப்படுகிறார்கள். விதிமுறைகள் இருந்தும் மனிதர்கள் மனித கழிவுகளை அள்ள பாதாள சாக்கடைக்குள் இறக்கி விடப்படுகிறார்கள். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







