தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் பவுலராக இருந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரரும் இவர் தான். இப்படி சாதனை நாயகனாக வலம் வந்த முரளிதரன் தன் வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். பலரும் அறிந்திடாத அவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையமாக வைத்து 800 என்கிற திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
முத்தையா முரளிதரனின் தோற்றத்தில் மதுர் மிட்டல் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்தவர் மதுர் மிட்டல். இவர் மில்லியன் டாலர் ஆர்ம், கஹின் பியார் ந ஹோ ஜயே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்துவரும் இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. ஜிப்ரன் இசையமைக்க பிரவின் கே.எல்.எடிட்டிங் செய்கிறார்.
இந்நிலையில், தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக முத்தையா முரளிதரன் பேசியதாவது
“மழை பெய்த போதிலும் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. 800 படம் தொடர்பாக எனக்கு நேர்மறையான விஷயங்கள் வந்தடைகின்றன. நான் பல நாடுகளுக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். 800 திரைப்படத்தை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். 800 ஒரு நல்ல படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
800 திரைப்படம் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







