மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க ஏடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதியில் ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோயில் காசிக்கு நிகரான சிறப்புடையதாகும். இங்கு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது திருஞானசம்பந்தர் எழுதிய பாடல் அடங்கிய தங்க ஏடு ஒன்றையும், கோயிலின் அக்காலத்து வரவு, செலவு கணக்குகளையும் கண்டறிந்தனர்.
இதுகுறித்து ஒலைச்சுவடி திட்டப்பணிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலக தமிழ் ஆராய்ச்சி பேராசிரியருமான தாமரை பாண்டியன் கூறுகையில், சுமார் 100
ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில்
திருஞானசம்பந்தர் வருகை தந்த போது, ஒலைச்சுவடி போல் தங்கத்திலான ஏடு
அமைத்து அதில் கோயில் குறித்து பாடல் ஒன்றினை எழுதிவைத்துள்ளார்.
இதுபோன்ற தங்க ஏடு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை எனவும், தமிழ்நாட்டில் வேறு எங்கும் தங்கத்திலான ஏடுகள் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், திருவேடகம் ஏடகநாதர் ஏழவார்குழலி அம்மன் கோயிலில் கிடைத்தது அரிய பொக்கிஷம் என குறிப்பிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா








