கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை நம்பிக்கை

கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மல்லேஷ்வரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை…

கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மல்லேஷ்வரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2018ல் பாஜகவுக்கு நம்பர் 1 அந்தஸ்தை மக்கள் வழங்கினார்கள். பாஜக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தனி பெரும்பானமையுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

ராகுல்காந்தி கர்நாடகாவில் அமராக மாறி உள்ளார். வேறு மாநிலத்தில் தேர்தல் நடந்தால் அக்பராகவும், ஆண்டனியாகவும் மாறுவார். அதனால் தான் ராகுல்காந்தியை அமர் அக்பர் ஆண்டனி என அழைக்கிறோம்.

இதையும் படியுங்கள் : சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்

கர்நாடகாவில் பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் வந்துள்ளனர். கர்நாடகாவில் பொருளாதாரத்தில், எல்லா நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவின் ஆட்சியை பார்த்துள்ளனர். இங்குள்ள தமிழ் மக்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர். பெங்களூரில் 12 தொகுதிகளுக்கு மேல் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர்.

கர்நாடகாவில் திமுகவை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. கும்மிடிப்பூண்டியை தாண்டி திமுக செல்வது இல்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஒரு வேட்பாளர், இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளவர்கள் பற்றி இங்கு பேசுவது நன்றாக இருக்காது.

ஒரு சில வேட்பாளர்களை நிறுத்தியுள்ளவர்களிடம் சென்று, தமிழருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சிரமப்பட்டு பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ள பொழுது, அவரை எதிர்த்து ஏன் வேட்பாளரை நிறுத்தி உள்ளீர்கள் என அவர்களிடம் (அதிமுக) தான் கேட்க வேண்டும்.

ஏப்ரல் 14ம் தேதி செய்தியாளர் சந்திப்பில், என்னென்ன குற்றச்சாட்டுகளை முன் வைத்தேனோ, அவை அனைத்திற்கும் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கக் கூடிய தைரியமும் தன்மையும் என்னிடம் உள்ளது. திமுகவில் இதுவரை மூன்று பேர் வழக்கு தொடுத்துள்ளார்கள். அவர்கள் அளித்த நோட்டீசை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.