கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள், வேட்புமனுக்களை திரும்பப் பெற்ற நிலையில், இபிஎஸ் அறிவித்த அதிமுக வேட்பாளரும் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர், புலிகேசி நகர், கோலார் தங்கவயல், மற்றும் காந்திநகர் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தார். கோலார் தங்கவயல் தொகுதியில் ஏ.அனந்தராஜ் மற்றும் காந்திநகர் தொகுதியில் கே.குமார் மற்றும் புலிகேசி நகர் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : கர்நாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! – அண்ணாமலை நம்பிக்கை
இதனையடுத்து, ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்கள், வேட்புமனுவை திரும்பப் பெறுவது என கர்நாடகா மாநில குழு ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமாரும், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டிடும் ஆனந்தராஜும் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த, புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட இருந்த அன்பரசன் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார். பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளதாக, அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.








