மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் , மே 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட வழிபாடுகளைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.
தல்லாக்குளம் அழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் புறப்பட்ட கள்ளழகரை வழிநெடுக தீபங்கள் ஏற்றியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கோவிந்தா கோஷங்கள் முழங்கியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர்.
கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக தங்கக் குதிரையில் பச்சை நிறப் பட்டுடுத்தி வந்த கள்ளழகரை, ஸ்ரீவீரராகவப்பெருமான் வரவேற்கும் வழிபாடு நடைபெற்றது.
தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்திடும் தீர்த்தவாரி வழிபாடுகளை மேற்கொண்டனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகையில் இறங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை நேரில் தரிசிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் நியூஸ்7 தமிழ் நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை நியூஸ்7 பக்தி யூடியூப் சேனலில் காண :








