மதுரை சித்திரை திருவிழா – மூன்றாம் நாளாக சுவாமி, அம்மன் வீதி உலா!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்றும் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா வந்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை சுவாமியும் அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது. பிரியாவிடையுடன் தங்கச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலை சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது. அப்போது சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, தங்க சப்பரத்திலும் மற்றொரு தங்க சப்பரத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் சன்னதி, தேரடி, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், கீழமாசி வீதி உள்ளிட்ட இடங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கோயிலை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வீதி உலாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.