மதுரையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த கொள்ளையர்கள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து செல்வதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்தன.
இதனால் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அப்பகுதியில் இரவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு இருசக்கர வானங்களில் வந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனால் காவல்துறையினர் அவர்களை துரத்தி மடக்கிபிடித்தனர்.
இதில் நான்கு இளைஞர்களும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், வீரமணி, பரதன், நாகராஜ், என்பதும் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டுவரும் கும்பல் என விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.







